நிபோங் திபால், பிப்ரவரி,08-
வரும் 2027-ஆம் ஆண்டு கல்வித் தவணையில், 6 வயது சிறுவர்கள் முதலாம் ஆண்டில் இணைவதற்குப் பெற்றோர்களிடையே, குறிப்பாக நகர்ப்புறங்களில் பெரும் வரவேற்பு இருக்கும் என கல்வி அமைச்சு எதிர்பார்க்கிறது. இதற்கான முறையான முன்பதிவு இன்னும் தொடங்கவில்லை என்றாலும், தொடக்கக்கட்ட தரவுகளின்படி நகர்ப்புறப் பெற்றோர்கள் இந்த மாற்றத்தை மிகவும் சாதகமாகப் பார்ப்பதாகக் கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் தெரிவித்தார்.
இந்த மாணவர் சேர்க்கையை முன்னிட்டு, கல்வி அமைச்சு தனது தயார்நிலை பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளதோடு, இதற்காக சுமார் 20,000 புதிய ஆசிரியர்களைப் பணியமர்த்தவும் திட்டமிட்டுள்ளது. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்பறை வசதிகளை மேம்படுத்த 'தொழில்துறை கட்டுமான அமைப்பு' – IBS முறையைப் பயன்படுத்தி புதிய வகுப்பறைகளை உருவாக்கவும், இருக்கும் இடங்களைச் சீரமைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆசிரியர்களுக்கான பயிற்சிகள், உள்கட்டமைப்பு வசதிகளைத் திட்டமிடுதல் ஆகிய இரண்டு முக்கிய அம்சங்களில் அமைச்சகம் தற்போது அதிக கவனம் செலுத்தி வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.








