ஈப்போ, நவம்பர்.15-
பேரா மாநிலத்தில் முஸ்லிம் அல்லாதோர் சமூக நலத் திட்டங்களுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீட்டை வழங்கும்படி மாநில அரசாங்கத்திடம் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளதாக மாநில இந்திய விவகாரங்களுக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் கூறினார்.
இம்மாதம் 26 ஆம் தேதி பேரா மாநில அரசு, 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மாநில சட்டமன்றத்தில்தாக்கல் செய்யவிருக்கிறது.

அந்த பட்ஜெட்டில் முஸ்லிம் அல்லாதோருக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று மாநில மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ சரானி முகமட்டிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக டத்தோ சிவநேசன் குறிப்பிட்டார்.
நேற்று இரவு கம்பார், மெம்பாங் டி , ஆவாங்கில் மாலிம் நாவார் சட்டமன்ற உறுப்பினர் பவாணி வீரையா நடத்திய தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோ சிவநேசன் இதனைத் தெரிவித்தார்.
இதனிடையே பேரா மாநிலத்தில் அரசாங்க நிலங்களில் கட்டப்பட்டுள்ள ஆலய விவகாரங்கள் மற்றும் துண்டாடல்பட்டுள்ள தோட்ட நிலங்களில் கட்டப்பட்ட ஆலயங்களின் நிலப்பட்டா விவகாரம் , புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் இந்திய மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வுக்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டத்தோ சிவநேசன் குறிப்பிட்டார்.
முன்னதாக, இந்த நிகழ்வில் பேசிய மாலிம் நாவார் சட்டமன்ற உறுப்பினர் பவாணி வீரையா, இந்தத் தொகுதியில் ஆண்டுதோறும் தீபத் திருநாளை முன்னிட்டு திறந்த இல்ல உபசரிப்பை நடத்துவது வழக்கமாகும். அந்த வகையில் இந்த ஆண்டும் நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் மூவினங்களும் கலந்து கொண்டது மகிழ்ச்சியை அளிப்பதாகக் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் பேரா சுல்தான் பிறந்தநாளை முன்னிட்டு டத்தோ விருது பெற்ற ஆட்சிக் குழு உறுப்பினர் சிவநேசனுக்கு மாலை அணிவித்து, சிறப்பு செய்யப்பட்டது.








