கோலாலம்பூர், ஜனவரி.05-
மலேசியாவை ஒரு 'மகத்தான தேசமாக' மாற்றுவதற்கு அரசு ஊழியர்கள் மற்றும் மக்கள் ஒன்றிணைந்து கடுமையாக உழைக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.
2025-இல் எட்டப்பட்ட பொருளாதார வளர்ச்சியை அடித்தளமாகக் கொண்டு, 2026-இல் மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்துவதே அரசின் முதன்மை இலக்கு. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி, ரிங்கிட்டின் மதிப்பைத் தொடர்ந்து நிலைப்படுத்தத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன என்று பிரதமர் குறிப்பிட்டார்.
மடானி அரசாங்கத்தின் கீழ் ஊழல் மற்றும் அதிகார முறைகேடுகளுக்கு ஒரு போதும் இடமில்லை. பொது நிதியைச் செலவிடுவதில் அரசு ஊழியர்கள் மிகுந்த நேர்மையுடனும், பொறுப்புடனும் செயல்பட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
இன்று காலை 11. 45 மணியளவில் புத்ராஜெயாவில் Dewan Seri Indon-னில், பிரதமர் துறையின் மாதாந்திர பேரணியில் கலந்து கொண்டு, உரையாற்றிய, 2026 ஆம் ஆண்டுக்கான புத்தாண்டு செய்தியில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இதனைத் தெரிவித்தார். இந்தப் பேரணியில் துணைப்பிரதமர்களான டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி, டத்தோ ஶ்ரீ ஃபடில்லா யுசோப் உட்பட பிரதமர் துறையைச் சேர்ந்த பல்வேறு இலாகாக்களின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். பிரதமரின் உரை, பல்வேறு மின் ஊடகங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
அரசு இயந்திரத்தின் செயல்பாடுகள் இன்னும் வேகமாகவும், வெளிப்படையாகவும் இருக்க வேண்டும். தேவையற்ற சிவப்பு நாடா முறைகளை ஒழித்து, மக்களுக்கு வழங்கும் சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதில் வேகம் காட்ட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, இன மற்றும் மத நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதே நாட்டின் பலம். மலேசியா எமது வீடு என்ற உணர்வுடன் ஒவ்வொரு குடிமகனும் செயல்பட வேண்டும் பிரதமர் தமது உரையில் முக்கியமாக வலியுறுத்தினார்.
நமது செயல்கள் வெறும் வார்த்தைகளால் அல்ல, செயல்களால் நம் நாட்டின் மேன்மையை உலகிற்கு நிரூபிக்க வேண்டும். அந்த வகையில் 2026-ஆம் ஆண்டு மலேசியாவின் வரலாற்றில் ஒரு பொற்காலமாக அமையும் என்று பிரதமர் தனது உரையை நிறைவு செய்வதற்கு முன்னதாக சில அதிரடி அறிவிப்புக்களையும் அறிவித்தார்.
மாணவர்களுக்குத் தொடக்கப்பள்ளி கல்வி உதவி : 2026-ஆம் ஆண்டு புதிய கல்வித் தொடங்கவிருக்கும் நிலையில், நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் குறிப்பாக வருமான வரம்பின்றி அனைத்து மலேசியர்களின் பிள்ளைகளுக்கும் தலா 150 ரிங்கிட் நிதி உதவி வழங்கப்படும். இது ஜனவரி மாதம் 12 ஆம் தேதி முதல் மாணவர்களின் பெற்றோர்களிடம் நேரடியாகச் சென்றடைவது உறுதிச் செய்யப்படும்.
தமிழ்ப்பள்ளிகள் மற்றும் சீனப்பள்ளிகளுக்குக் கூடுதல் நிதியையும் பிரதமர் அறிவித்துள்ளார். நாட்டின் கல்வி உள்கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், தமிழ்ப்பள்ளிகள் மற்றும் சீனப்பள்ளிகளின் பராமரிப்பு மற்றும் கட்டிடச் சீரமைப்புப் பணிகளுக்காகக் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, புறநகர்ப் பகுதிகளில் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் வசதிகள் மேம்படுத்தப்படும்.
குறைந்த வருமானம் பெறும் குறிப்பிட்ட பிரிவினருக்கு குறிப்பாக, STR பெறுநர்களுக்கு ஜனவரி 6 ஆம் தேதி முதல் மாதம் தோறும் இந்த உதவி வழங்கப்படும். இதே போன்று e-Kasih பட்டியலில் உள்ள ஏழ்மையான குடும்பங்கள், மாதம்தோறும் 200 ரிங்கிட் வீதம் ஆண்டுக்கு மொத்தம் 2,400 ரிங்கிட் வழங்கப்படும்.
2026-ஆம் ஆண்டிற்கான அடிப்படை ரஹ்மா உதவித் திட்ட,ஆன SARA – வின் வாயிலாக மீண்டும் ஒரு முறை 100 ரிங்கிட் வழங்கப்படும். ஒருமுறை வழங்கப்படும் இந்த 100 ரிங்கிட் சிறப்பு உதவி, 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 9-ஆம் தேதி முதல் வழங்கப்படும்.
B40 குடும்பங்களுக்கு மாதம் தோறும் 100 ரிங்கிட் என ஆண்டுக்கு மொத்தம் 1,200 ரிங்கிட் வழங்கப்படும். வாழ்த்கைத் துணையில்லாத முதியவர்களுக்கு மாதம் தோறும் 50 ரிங்கிட் முதல் 150 ரிங்கிட் வரை வழங்கப்படும். திருமணம் ஆகாத தனிநபர்களுக்கு மாதம்தோறும் 50 ரிங்கிட் வீதம் ஆண்டுக்கு மொத்தம் 600 ரிங்கிட் வழங்கப்படும்.
இந்த நிதி நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படாது. மாறாக, பெறுநர்களின் மைகாட் அடையாள அட்டை மூலம் வரவு வைக்கப்படும். இத்தொகையைக் கொண்டு நாடு முழுவதும் உள்ள சுமார் 8,400 அங்கீகரிக்கப்பட்ட கடைகளில் குறிப்பாக சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் சில்லறைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும்.








