கோலாலம்பூர், செதாப்பா, டானாவ் கோத்தா வில் ஆடவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு ஆடவர்களை ஒரு வார காலத்திற்கு தடுத்து வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளதாக வங்சா மஜு போலீஸ் நிலையத் தலைவர் அஷாரி அபு ஸமாஹ் தெரிவித்தார்.
36 மற்றும் 37 வயதுடைய அந்த இரு நபர்கள், இன்று திங்கட்கிழமை காலையில் ஜாலான் டூத்தாவில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, தடுத்து வைக்கப்படுவதற்கான ஆணையை போலீசார் பெற்றுள்ளதாக அஷாரி அபு ஸமாஹ் குறிப்பிட்டார்.
அவர்கள் வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி வரையில் தடுத்து வைப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக அவர் விளக்கினார்.
கழுத்து,காது மற்றும் உடலின் இதர பகுதிகளில் பலத்த வெட்டுக்காயங்களுடன் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லோரியின் பெட்டியில் 56 வயதுடைய நபர், கொலை செய்யப்பட்ட நிலையில் கடந்த வாரம் கண்டு பிடிக்கப்பட்டார்.
இந்த கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு நபர்கள், உயிரிழந்த நபருக்கு நன்கு அறிமுகமானவர்கள் என்பது புலன் விசாரணையில் தெரியவந்துள்ளதாக அஷாரி அபு ஸமாஹ் குறிப்பிட்டார்.
இச்சம்பவம் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.








