புக்கிட் மெர்தாஜம், டிசம்பர்.05-
ஓன்லைன் மோசடியில் ஈடுபட்டதாக 18 அந்நிய நாட்டவர்கள், பினாங்கு, புக்கிட் மெர்தாஜம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.
குற்றஞ்சாட்டப்பட்டர்களில் 14 பேர் ஜப்பான் பிரஜைகள் ஆவர். எஞ்சியவர்கள் சீன நாட்டுப் பிரஜைகள் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. 24க்கும் 51 க்கும் இடைப்பட்ட வயதுடைய இந்த 18 பேரும் மாஜிஸ்திரேட் ரொஷாயாத்தி ரடெல்லா முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த நவம்பர் 20 ஆம் தேதி மதியம் பினாங்கு, புக்கிட் தெங்கா, தாமான் புக்கிட் ஜுருவில் உள்ள ஒரு வீட்டில் இத்தகைய ஓன்லைன் மோசடியில் ஈடுபட்டு வந்ததாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு ஆங்கிலமொழியிலும் சீன மொழியிலும் வாசிக்கப்பட்டது . குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் தலா பத்தாயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றயில் சட்டத்தின் கீழ் இந்த 18 பேரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.








