இந்தியாவிடம் இருந்து பிராமோஸ் (BrahMos) அதிவேக ஏவுகணைகளை வாங்குவதற்கான மலேசியாவின் முன்மொழிவு இன்னும் முதற்கட்ட ஆய்விலேயே இருப்பதாகவும், கொள்முதல் தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் நோர்டின் தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டபோது, இரு நாட்டு அரசாங்கங்களுக்கு இடையிலான முதற்கட்ட கட்டப் பேச்சுவார்த்தையில் இந்த முன்மொழிவு முதன்முதலாக முன்வைக்கப்பட்டதாக அவர் கூறினார்.
பிராமோஸ் ஏவுகணைகளை வாங்குவது குறித்து முடிவெடுப்பதற்கு முன்பு, அரச மலேசிய விமானப்படையான ஆர்எம்எஎஃப் (RMAF) விரிவான தொழில்நுட்ப மதிப்பீட்டை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக, மலேசிய விமானப்படையின் தற்போதைய Su-30MKM போர் விமானங்களுடன் இந்த ஏவுகணைகளைப் பொருத்தி ஒருங்கிணைக்க முடியுமா என்பது ஆய்வு செய்யப்படவுள்ளது.
இதனுடன் செயல்பாட்டுத் தேவைகள், தொழில்நுட்பப் பொருத்தம், கட்டமைப்பு ஒருங்கிணைப்பு, மேம்படுத்துவதற்கான செலவுகள் மற்றும் நீண்டகாலப் பராமரிப்புச் செலவுகள் ஆகியவையும் மதிப்பீடு செய்யப்படும் என தானா மேரா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ இக்மால் ஹிஷாம் அப்துல் அஸிஸ் எழுப்பிய கேள்விக்கு நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் காலிட் நோர்டின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.








