ஈப்போவில் போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவரை காரால் மோதி கொல்ல முயன்றதாக கார் கழுவும் நிலைய ஊழியரான 29 வயது கே. விக்னேஸ் என்பவர் மீது இன்று ஈப்போ செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
லான்ஸ் கார்ப்பரல் பாட்ருல் இஸ்வானு பௌஸி, 29, என்பவரை ஹோண்டா சிவிக் காரால் மோதி கொல்ல முயன்றதாகவும், இச்சம்பவம் கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதி காலை 11 மணியளவில் ஜாலான் பங்ளிமா புக்கிட் கந்தாங் வாஹாப், ஈப்போ பகுதியில் நடந்ததாகவும் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
குற்றத்தை மறுத்த விக்னேஸுக்கு 20 ஆயிரம் ரிங்கிட் பிணை வழங்கப்பட்டது. மாதம் ஒருமுறை போலீஸ் நிலையத்தில் ஆஜராகவும், கடப்பிதழை ஒப்படைக்கவும், சாட்சிகளைத் தொடர்பு கொள்ள வேண்டாமெனவும் நிபந்தனை விதிக்கப்பட்டது.
இதனிடையே, போதைப்பொருள் தாக்கத்தில் வாகனம் ஓட்டியது உள்ளிட்ட மேலும் எட்டு குற்றச்சாட்டுகளும் அவர் மீது தனியாக சுமத்தப்பட்டன.
வழக்கு அக்டோபர் 26ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.








