கோலாலம்பூர், ஜூலை.24-
ஜோகூர் கடற்பரப்பில் வீற்றிருக்கும் பவளப் பாறைத் தீவான பூலாவ் பத்து பூத்தே தீவு தொடர்பில் 100 வயது காரணமாக துன் மகாதீர் முகமது மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அறிவித்து இருக்கும் அரசாங்கத்தின் முடிவை அந்த முன்னாள் பிரதமரின் வழக்கறிஞர் சாடியுள்ளார்.
இந்தத் தீவு விவகாரம் தொடர்பில் உண்மை நிலவரத்தை விளக்குவதற்கும், தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கும் துன் மகாதீருக்கு எந்த சூழ்நிலையிலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும், அவர் தனது உரிமையைத் தற்காத்துக் கொள்வதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது என்றும் அவரின் வழக்கறிஞர் ஸைனுர் ஸாகாரியா மற்றும் ராஃபிக் ரஷிட் அலி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
பத்து பூத்தே தீவு விவகாரம் துன் மகாதீரினால் ஏமாற்றப்பட்டுள்ளது என்று குற்றஞ்சாட்டியிருக்கும் அமைச்சரவை உறுப்பினர்களைக் கேள்வி எழுப்புவதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து தாங்கள் காத்திருப்பதாக அந்த இரு வழக்கறிஞர்களும் சூளுரைத்துள்ளனர்.
பத்து பூத்தே தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட அரச விசாரணை ஆணையம், 2018 ஆண்டு அந்த பவளப் பாறைத் தீவின் இறையாண்மை தொடர்பான மேல்முறையீட்டு விண்ணப்பத்தை பரிசீலனைக்காக அனுப்புவதை துன் மகாதீர் தடுத்து நிறுத்தியதாகக் குற்றஞ்சாட்டியிருந்தது. இதன் மூலம் நாட்டின் பிரதமர் என்ற முறையில் அவர் அமைச்சரவையைத் தவறாக வழி நடத்தியுள்ளார் என்று அந்த ஆணையம் தனது விசாரணை முடிவில் தெரிவித்து இருந்தது.








