மலாக்கா, டிசம்பர்.13-
டுரியான் துங்காலில் மூன்று இந்திய இளைஞர்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், இறந்தவர்களில் ஒருவரின் மனைவி எனத் தம்மைக் கூறிக் கொண்ட பெண், சட்டப்பூர்வமாக அவரை திருமணம் செய்யவில்லை என மலாக்கா போலீசார் தெரிவித்துள்ளனர்.
31 வயதான அப்பெண்ணின் மீது கடந்த 2012-ஆம் ஆண்டு முதல், வாகனத் திருட்டு, கொள்ளை, கொலை முயற்சி என 10 குற்றப்பதிவுகள் உள்ளதாக மலாக்கா போலீஸ் தலைவர் டத்தோ ஸுல்கைரி முக்தார் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, இவ்வாண்டு ஜூலை மாதம் ஜாசினில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் அப்பெண்ணுக்குத் தொடர்பு இருப்பதாகவும் ஸுல்கைரி குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், கடந்த மூன்று ஆண்டுகளாக, அப்பெண் சம்பந்தப்பட்ட இளைஞருடன் டுரியான் துங்காலில் வசித்து வந்ததாகக் குறிப்பிட்ட அவர், அந்த இளைஞரின் சட்டப்பூர்வ மனைவி ஜோகூரில் வசிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அப்பெண்ணின் 55 வயதான தந்தை மீது கடந்த 2002-ஆம் ஆண்டு முதல் 24 குற்றப்பதிவுகள் இருப்பதையும் சுட்டிக் காட்டிய ஸுல்கைரி, இன்று வரையில் அந்நபர் போலீசாரால் தேடப்படும் குற்றப் பின்னணியைக் கொண்டவர் என்றும் தெரிவித்துள்ளார்.
டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தற்போது புக்கிட் அமான் விசாரணை செய்து வரும் நிலையில், அவ்விசாரணைக்கு மலாக்கா போலீஸ் முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றும் ஸுல்கைரி உறுதிப்படுத்தியுள்ளார்.
அதே வேளையில், நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல், மலாக்கா போலீஸ் தலைமையகத்தில், போலீசாருக்கு ஆதரவாக பொதுமக்கள் வழங்கிய குறிப்பாணையைத் தாம் பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மோசமான வானிலையிலும் கூட, முறையான அனுமதியுடன் பொதுமக்கள் நடத்திய அக்கூட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது.
இதன் மூலம், மலாக்கா போலீசாரின் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவது தெளிவாகத் தெரிகின்றது என்றும் ஸுல்கைரி தெரிவித்துள்ளார்.








