முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கை கவிழ்ப்பதற்கு டிஏபி யுடன் இணைந்து செயல்பட்டதாக துன் மகாதீர் முகமது கூறியிருக்கும் குற்றச்சாட்டை அக்கட்சியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் வன்மையாக மறுத்துள்ளார்.
துன் மகாதீரின் அந்த குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்று குறிப்பிட்ட முன்னாள் இஸ்கந்தர் புத்ரி நாடாளுமன்ற உறுப்பினரான லிம் கிட் சியாங், எந்தவொரு தருணத்திலும் தாங்கள் வஞ்சகத்துடன் செயல்பட்டது கிடையாது என்றார்.
துன் மகாதீருடன் டிஏபி ஒத்துழைப்பு கொண்டதற்கு முக்கிய காரணம், அந்த முன்னாள் பிரதமர், குணம் மாறிவிட்டார் என்ற நம்பிக்கையில்தான் அவருடன் இணைந்து செயல்படுவதற்கு க தாங்கள் இணக்கம் தெரிவித்ததாக லிம் கிட் சியாங் குறிப்பிட்டார்.
ஒரு திறமையான நிர்வாகம், சட்டத்தை காக்கும் மாண்பு உள்ளிட்டு, நாட்டின் நலனுக்காக முன்வைக்கப்பட்ட பலதரப்பட்ட அம்சங்களின் காரணமாகவே துன் மகாதீருடன் டிஏபி ஒத்துழைத்ததே தவிர நஜீப்பை பதவியிலிருந்து வீழ்த்துவதற்காக அல்ல என்று லிம் கிட் சியாங் விளக்கம் அளித்துள்ளார்.
தமது சுய சரிதை தொடர்பான இரண்டாவது நூல் வெளியீடு தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வில் டிஏபி யின் முன்னாள் தலைவரான லிம் கிட் சியாங் மேற்கண்டவாறு கூறினார்.








