தற்போதைய கடும் வெப்பநிலைக்கு மத்தியில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் பிறப்பித்த உத்தரவை கல்வி அமைச்சு ஏற்றுள்ளது.
வெப்பமான சூழலைக் கருத்தில் கொண்டு, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு தகுந்த விளையாட்டு உடைகளை அணிந்து வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மூன்று நாட்களுக்கு வெப்பநிலை 35° டிகிரி செல்சியசுக்கு மேல் இருந்தால், முகாம் மற்றும் ஓட்டப்பந்தயம் போன்ற வெளிப்புற நடவடிக்கைகளை ஒத்திவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெப்ப அலை 'நிலை 2'-ஐ எட்டி, வெப்பநிலை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு 37° டிகிரி செல்சியசுக்கு மேல் பதிவானால், பள்ளிகளைத் தற்காலிகமாக மூடத் தலைமையாசிரியர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
வரும் மார்ச் 30 ஆம் தேதி திங்கட்கிழமை பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில், அனைத்துக் கல்வி நிறுவனங்களும் இந்த விதிமுறைகளைத் தீவிரமாகக் கடைப்பிடிக்குமாறு கல்வி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.








