கோலாலம்பூர், ஜூலை.16-
நாட்டில் சமையல் எண்ணெய் மானிய நிர்வாகத் திட்டம், தகுதியான மக்களை முழுமையாகச் சென்றடையவில்லை என்று PAC எனப்படும் நாடாளுமன்றப் பொதுக் கணக்குக் குழு தெரிவித்துள்ளது. 2019 முதல் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி வரை வழங்கப்பட்ட 10.879 பில்லியன் ரிங்கிட் மானியத்தில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக இன்று நாடாளுமன்ற வளாகத்தில் PAC அறிக்கையை சமர்ப்பித்த அதன் துணைத் தலைவர் திரேசா கோக் இவ்விவரத்தை வெளியிட்டார்.
நாட்டில் சமையல் எண்ணெயின் உண்மையான தேவை மாதத்திற்கு 19 ஆயிரம் முதல் 30 ஆயிரம் மெட்ரிக் டன்கள் மட்டுமே. ஆனால், தற்போது 60,000 மெட்ரிக் டன்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
ஒரு கிலோ பாக்கெட் சமையல் எண்ணெய், தகுதியற்ற வெளிநாட்டவர்களாலும் வணிக நிறுவனங்களாலும் சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படுகிறது. தணிக்கை செய்யப்பட்ட 9 சமையல் எண்ணெய் பாக்கெட் நிறுவனங்களில் 2 நிறுவனங்களிடம் முறையான 'ஹலால்' சான்றிதழ் இல்லை என்று திரேசா கொக் சுட்டிக் காட்டினார்.
மானிய எண்ணெய் சந்தையில் 67 விழுக்காட்டை அந்நிய நிறுவனங்களே கட்டுப்படுத்துகின்றன. உள்ளூர் அரசு சார்பு நிறுவனங்களான GLC பங்களிப்பு, 10.6 விழுக்காடு மட்டுமே. இதன் தொடர்பில் இந்த முறைகேடுகளைத் தடுக்க, மாதந்திர ஒதுக்கீட்டைக் குறைக்க வேண்டும் என்றும், கோழி மற்றும் முட்டை விலையைப் போல சமையல் எண்ணெய் விலையையும் சந்தை நிலவரப்படி வெளிப்படையாகவும், சுதந்திரமாகவும் நிர்ணயிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் Datuk Mas Ermieyati Samsudin தலைமையிலான PAC குழு பரிந்துரைத்துள்ளது என்று திரேசா கோக் தெரிவித்தார்.








