கோலாலம்பூர், பிப்ரவரி.12-
மலேசியாவுடனான எனது பதவிக்காலம் முடிவுக்கு வருவதை என்னால் நம்ப முடியவில்லை; இந்த அழகான நாட்டை விட்டுப் பிரிவது எனக்கு மிகுந்த மனவேதனையை அளிக்கிறது.இங்குள்ள மக்களின் விருந்தோம்பலும், பன்முகத்தன்மையும் எப்போதும் என் நினைவில் இருக்கும்," என அமெரிக்கத் தூதர் எட்கார்ட் டி. காகன் தனது பிரியாவிடை உரையில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
மலேசியாவின் தனித்துவமான கலாச்சாரம் மற்றும் உணவு முறைகள் குறித்துப் பாராட்டிய அவர், கடந்த சில ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவு, குறிப்பாகப் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். "நான் இங்கு வெறும் ஒரு தூதராக மட்டும் பணியாற்றவில்லை, இந்த நாட்டின் ஓர் அங்கமாகவே என்னை உணர்ந்தேன்; மலேசியர்களின் அன்பும் நட்பும் நான் எங்குச் சென்றாலும் என்னுடன் வரும்," என்று காகன் தனது பிரியாவிடை செய்தியில் மேலும் சேர்த்தார்.
தமது 35 ஆண்டு கால நீண்ட தூதரகப் பணியை மலேசியாவோடு நிறைவு செய்யும் காகன், இங்குள்ள பன்முகத்தன்மையை 'மந்திரம் போன்றது' என்று வர்ணித்துள்ளார். குறிப்பாக, பத்துமலையில் நடைபெற்ற தைப்பூசத் திருவிழாவில் தானும் ஓர் அங்கமாகப் பங்கேற்று, வெறும் காலுடன் பால்குடம் ஏந்தி படிகளில் ஏறியது தமது வாழ்வில் மறக்க முடியாத ஒரு ஆன்மீக மற்றும் கலாச்சார அனுபவம் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். மலேசிய மக்களின் 'Can-lah' என்ற விடாமுயற்சி மனப்பான்மை இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த உதவும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.








