கோலாலம்பூர், அக்டோபர்.29-
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு மலேசியா தவறியிருக்குமானால் வரி உயர்த்தப்பட்டு இருக்கலாம் என்று முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு ஸாஃப்ருல் அஸிஸ் தெரிவித்தார்.
அமெரிக்காவுடன் மலேசியா வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டு இருப்பது மூலம் அந்த வல்லரசு, மலேசியாவின் ஏற்றுமதிப் பொருள்களுக்கு வரி உயர்த்தப்படுவது தடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் விளக்கினார்.
47 ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் அமெரிக்காவுடன் மலேசியா வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டு இருப்பது தொடர்பில் எதிர்கட்சியினர் எழுப்பி வரும் கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் தெங்கு ஸாஃப்ருல் இதனைத் தெரிவித்தார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் மலேசியாவிற்கு 25 விழுக்காடு வரியை விதித்த அமெரிக்கா, பின்னர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதன் விளைவாக வரி விகிதத்தை 19 விழுக்காடாகக் குறைத்தது என்பதையும் தெங்கு ஸாஃப்ருல் சுட்டிக் காட்டினார்.
அமெரிக்காவுடன் மலேசியா ஒப்பந்தம் செய்து கொண்டது மூலம் எதிர்காலத்தில் வரி உயர்த்தப்படுவது தடுக்கப்பட்டுள்ளது என்று அவர் விளக்கினார்.








