பாலிக் பூலாவ், அக்டோபர்.30-
பினாங்கு பாலிக் பூலாவ் குடியிருப்புப் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஏழு தெரு நாய்கள் இறந்து கிடந்ததையடுத்து, அவை விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, அவற்றைக் கடந்த ஒரு வருடமாகப் பராமரித்து வந்த மீனாட்சி கண்ணன் என்பவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
நாய்கள் இறந்து கிடந்த இடத்திற்கு அருகே பிளாஸ்டிக் பை ஒன்றில் அரிசி இருந்ததாகவும், அதில் விஷம் கலந்திருப்பதாக நம்பப்படுகின்றது என்றும் அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், மற்ற தெரு நாய்கள் அதை உட்கொள்வதைத் தடுக்க தன்னார்வலர்கள் உடனடியாக அதை அப்புறப்படுத்தியதாகவும் மீனாட்சி தெரிவித்துள்ளார்.
தான் பராமரித்து வந்த 7 தெரு நாய்களும் வாயில் நுரையுடன் அடுத்தடுத்து இறந்து கிடந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








