கோலாலம்பூர், செப்டம்பர்,04-
குழந்தைகள் மற்றும் குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாசப் படங்களின் உள்ளடக்கத்தை விற்பனை செய்ததற்காக அண்மையில் கைது செய்யப்பட்ட ஒரு கும்பலுக்கு அனைத்துலகத் தொடர்புகள் இருப்பதாக நம்பப்படுகிறது என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் கூறுகிறது.
அந்தக் கும்பலின் ஆபாசப் பட உள்ளடக்க விற்பனை தொடர்பாக வெளிநாட்டு அதிகாரிகளிடமிருந்து மலேசிய காவல் துறைக்குத் தகவல் கிடைத்துள்ளதாக புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை சிஐடி இயக்குநர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்தார்.
அனைத்துலகத் தொடர்பு வலைகளுடன் கூடிய சில கறுப்பு வலைத்தளங்களில் குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான பல வீடியோக்கள் மற்றும் படங்கள் பதிவேற்றப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
கருப்பு வலைத்தளங்களை அணுகக்கூடிய உரிமையாளர்கள் மற்றும் தனிநபர்களைக் கண்டுபிடிப்பதில் போலீசார் சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்று இன்று புக்கிட் அமானில் தகவல் தொடர்பு அமைச்சு, காவல்துறை மற்றும் டிக் டாக் சம்பந்தப்பட்ட கூட்டத்திற்குப் பிறகு டத்தோ குமார் பெர்னாமாவிடம் இதனைத் தெரிவித்தார்.
இதற்கு மூளையாக இருந்து செயல்பட்டதாக நம்பப்படும் நபர் உட்பட 11 பேர் கடந்த ஜுலை 19 ஆம் தேதிக்கும் ஆகஸ்ட் 19 ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலக் கட்டத்தில் ஜோகூர் பாருவில் ஓப் பெடோ நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்டனர். இவர்களைத் தவிர வேறு யாரும் கைது செய்யப்படவில்லை என்று டத்தோ குமார் குறிப்பிட்டார்.








