மலேசிய கடப்பிதழின் செல்லத்தக்க காலக்கெடு 10 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட வேண்டும் என்று தீபகற்ப மலேசிய குடிநுழைவுத்துறை தொழிற்சங்கம், அரசாங்கத்திற்கு இன்று பரிந்துரை செய்துள்ளது.
கடப்பிதழின் அதிகமான பக்கங்களை பெரும்பாலோரி பயன்படுத்தாமல் இருக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம், அந்த கடப்பிதழின் செல்லத்தக்க ஆண்டு கூடிய பட்சம் 5 ஆண்டு காலமாகும். கடப்பிதழை 10 ஆண்டுகள் வரை பயன்படுத்தவதற்கு அனுமதிப்பது மூலம் ஒரு முறை விண்ணப்பிக்கும் கடப்பிதழை மக்கள் பத்து ஆண்டுகள் வரை பயன்படுத்த முடியும் என்று தொழிற்சங்கத் தலைவர் கேபிசம் அஜீத் சிங் தெரிவித்தார்.
கடப்பிதழின் காலக்கெடு, 6 மாதத்திற்கும் குறைவாக இருக்குமானால் அந்த கடப்பிதழை கொண்டு இருப்பவர்கள், தங்கள் நாட்டிற்குள் நுழைவதற்கு பெரும்பாலான நாடுகள் அனுமதி மறுக்கின்றன என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் ஐந்து ஆண்டுகளுக்கு உரிய மலேசிய கடப்பிதழ் காலக்கெடுவானது, 4 ஆண்டுகள் 6 மாதங்களே செல்லத்தக்கவையாகும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடப்பிதழில் காலக்கெடுவை 10 ஆண்டுகளுக்கு நீட்டிப்பது மூலம் கடப்பிதழை புதுப்பிக்க வருகின்றவர்களின் எண்ணிக்கை குறையும். இது குடிநுழைவு ஊழியர்களின் பணிச்சுமையை குறைக்கும் என்று கேபிசம் அஜீத் சிங் பரிந்துரை செய்துள்ளார்.








