பல்லைக்கழக மாணவர்களுக்கான நிதி உதவிகள், பி40 தரப்பைச் சேர்ந்தவர்களுக்கான சிறப்பு உதவித் திட்டம் உட்பட இந்திய சமூகத்திற்கு உதவுவதற்கான பல்வேறு வியூகத் திட்டங்களும், முயற்சிகளும் இந்த ஆண்டும் தொடரும் என்று மித்ராவின் சிறப்புப்பணிக்குழுவின் தலைவருமான டத்தோ ரா. ரமணன் உறுதி அளித்துள்ளார்.
இந்திய சமூகத்தை சேர்ந்த பி40 தரப்பினருக்கு உதவுவதற்கான விரிவான முன்னெடுப்புகளில் ஒரு பகுதியாக தகுதியுள்ளவர்களுக்கு நிதி உதவி விண்ணப்பத் திட்டத்திற்கு 3 கோடி வெள்ளி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இந்தியர்கள் சமூகவியல் பொருளாதார உருமாற்றுப்பிரிவான மித்ராவிற்கு பொறுப்பேற்றுள்ள டத்தோ ரமணன் குறிப்பிட்டார்.
இந்த மானிய உதவித் திட்டங்களில் விண்ணப்பம் செய்து, தேர்வு பெற்றவர்களுக்கான அனுமதி கடிதம் வழங்கும் நிகழ்வு, வரும் அக்டோபர் 26 ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெறவிருப்பதாகவும் டத்தோ ரமணன் குறிப்பிட்டார்.
இன்று நாடாளுமன்றத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான விநியோக சட்ட மசோதா மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது சுங்கை பூலோ எம்.பி.யுமான டத்தோ ரமணன் இதனை தெரிவித்தார்.
தவிர இந்திய சமூகத்தின் சமூகவியல் , பொருாளதார மேம்பாட்டிற்காக இது போன்ற திட்டங்களைத் தொடர மித்ராவிற்கு அடுத்த ஆண்டும் 10 கோடி வெள்ளி நிதி ஒதுக்கீட்டை அங்கீரித்து இருக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு இவ்வேளையில் தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக டத்தோ ரமணன் தமது நாடாளுமன்ற உரையில் குறிப்பிட்டார்.








