கோலாலம்பூர், ஆகஸ்ட்.30-
மலேசியாவில் சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் ஓர் இந்தியப் பிரஜை தொடுத்திருந்த சிவில் வழக்கைத் தள்ளுபடி செய்வதில் அரசாங்கம் தோல்விக் கண்டது.
அந்த இந்தியப் பிரஜைக்கு இழப்பீடாக 2 லட்சத்து 25 ஆயிரம் ரிங்கிட்டை வழங்குவதற்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சரியே என்று புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பை வழங்கியது.
கடந்த 2020 ஆம் ஆண்டில் கோவிட் 19 பரவலின் போது, வெளிநாட்டுப் பயணங்களுக்குத் தடை விதிக்கப்பட்டு இருந்த வேளையில் தம்மைக் கைது செய்து, தடுத்து வைத்திருந்தது சட்டவிரோதச் செயலே என்று ஓர் இந்தியப் பிரஜையான A. ஆனந்த கோபால், மலேசிய அரசாங்கத்திற்கு எதிராக இந்த சிவில் வழக்கைத் தொடுத்து இருந்தார்.
இந்தியா, திருச்சியைச் சேர்ந்த 42 வயது ஆனந்த கோபால், எதற்காக கைது செய்யப்பட்டார் என்பதற்கு நீதிமன்றம் நம்பும்படியாகக் காரணங்களைக் கூற, புலன் விசாரணை அதிகாரி A. ஜெயந்தேன் தவறிவிட்டார் என்று மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினருக்குத் தலைமையேற்ற நீதிபதி லிம் சோங் ஃபோங் தெரிவித்தார்.
நெகிரி செம்பிலான், ரந்தாவில் ஒரு சிலையைத் திருடிவிட்டார் என்று கைது செய்யப்பட்ட திருச்சியைச் சேர்ந்த ஆனந்த கோபால், அந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பாக எந்தவொரு விசாரணையும் மேற்கொள்ளாமல், கடைசியில் அவர், மலேசியாவில் கூடுதல் நாட்கள் தங்கிவிட்டார் என்று குற்றஞ்சாட்டப்பட்டது ஏற்க முடியாது என்று உயர் நீதிமன்றத்தின் முடிவை அப்பீல் நீதிமன்றம் ஏற்றுக் கொள்வதாக நீதிபதி லிம் சோங் ஃபோங் குறிப்பிட்டார்.
கோவிட் 19 பரவல் காலத்தில் மலேசியாவில் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள், விமானப் போக்குவரத்து இல்லாத நிலையில் அவர்கள் தங்கள் தாயகத்திற்குத் திரும்புவதற்கு 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை அரசாங்கம் கால அவகாசம் வழங்கியது.
அந்தக் காலக் கட்டத்தில், ஆனந்த கோபால் கூடுதல் நாட்கள் தங்கியிருந்தார் என்று போர்ட்டிக்சன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டி, அவரை நவம்பர் மாதம் 10 ஆம் தேதி வரை மலாக்கா, சுங்கை ஊடாங் சிறையில் வைக்கப்பட்டு இருந்தது சட்டவிரோதச் செயலாகும் என்று நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக் காட்டினார்.
மலேசியாவிற்கு 2020 ஆம் ஆண்டு மார்ச் 7 ஆம் தேதி வருகை புரிந்து மார்ச் 27 ஆம் தேதி தாயகம் திரும்புவதற்கு ஆனந்த கோபால் விமான டிக்கெட் வாங்கிய நிலையில் விமானப் போக்குவரத்து இல்லாத நிலையில் அவர் எவ்வாறு தாயகம் திரும்ப முடியும்? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
ஆனந்த கோபாலின் கடப்பிதழ் விவரங்களைச் சோதனைச் செய்வதற்கு கிட்டத்தட்ட 12 நாட்கள் ஆகி விட்டதாக விசாரணை அதிகாரி ஜெயந்தன் கூறிய காரணம் அறவே ஏற்க முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்தது.
எந்தவொரு தகவலையும் கண் இமைக்கும் நேரத்தில் பெறக்கூடிய இந்த நவீன தொழில்நுட்பக் காலத்தில் ஓர் இந்தியப் பிரஜையின் கடப்பிதழ் விவரத்தை அறிவதற்கு 12 நாட்கள் ஆனது என்று கூறப்படுவது விந்தையாக உள்ளது.
இவ்விவகாரத்தில் விசாரணை அதிகாரி ஜெயந்தேன் தவறு இழைத்துள்ளார். அந்த இந்தியப் பிரஜையின் கடப்பிதழ் மற்றும் மலேசிய விசா உண்மையானது. விசா கால அவகாசம் மட்டுமே காலாவதியாகியுள்ளது.
விசாரணை அதிகாரி செய்த தவற்றை அறியாமல், அந்த இந்தியப் பிரஜைக்கு உயர் நீதிமன்றம் அறிவித்த இழப்பீட்டுத் தொகையை எதிர்த்து அரசு தரப்பு மேல்முறையீடு செய்வதில் எந்த வகையிலும் தகுதியில்லை என்று அப்பீல் நீதிபதி லிம் சோங் ஃபோங் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.








