மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமையான ஏகேபிஎஸ் தலைமை இயக்குநர் பொறுப்பிலிருந்து ஷுஹைலி ஸையின் மீண்டும் போலீஸ் துறைக்கு மாற்றுவது தொடர்பாக, சட்டத்துறைத் தலைமை அலுவலகமான ஏஜிசியின் ஆலோசனைக்கு போலீசார் காத்திருப்பதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் காலிட் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் கடந்த ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி தொடங்கிய ஷுஹைலி ஸையினின் இரண்டு ஆண்டுகால ஏகேபிஎஸ் தலைமை இயக்குநர் பதவிக்காலத்தை முன்கூட்டியே முடிவுக்குக் கொண்டுவர, மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அவர்களின் ஒப்புதல் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஷுஹைலி மீண்டும் போலீசுக்குத் திரும்பிய பின்னர், பொதுச் சேவை ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.
அரசாங்கப் பணியாளர்களின் ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்தும் எஸ்பிஏ மற்றும் போலீஸ் ஆணையத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டவை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
இதற்கிடையில், ஷுஹைலியின் ஏகேபிஎஸ் பணிக்காலம் முடிவடைந்ததும் அவரை மீண்டும் போலீசுக்கு மாற்ற அமைச்சு கடந்த வாரம் முடிவெடுத்ததாக உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் நேற்று உறுதிப்படுத்தியுள்ளார்.








