கோலாலம்பூரில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரை நோக்கிச் சென்ற மலேசியா ஏர்லைன்ஸ் விமானத்தில், நடுவானில் ஏற்பட்ட திடீர் மருத்துவ அவசரநிலையைத் தொடர்ந்து பயணி ஒருவர் உயிரிழந்தார்.
எம்எச்141 விமானத்தில் பயணித்த அந்த நபருக்கு விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த போது கடுமையான உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக விமானப் பணியாளர்களும், விமானத்தில் இருந்த மருத்துவர்களும் இணைந்து அவசர சிகிச்சை அளித்தனர்.
ஒரு மருத்துவர், மூன்று செவிலியர்கள் மற்றும் விமானப் பணியாளர் ஒருவர் இணைந்து சிபிஆர் எனப்படும் இதய-நுரையீரல் மீட்பு சிகிச்சையை மேற்கொண்டனர்.
எனினும், அந்தப் பயணியை உயிர் பிழைக்க வைக்க முடியாத நிலையில், விமானத்தில் இருந்த மருத்துவர் அவர் உயிரிழந்து விட்டதாக அறிவித்தார்.
இந்நிலையில், உயிரிழந்தவர் இந்தியாவைச் சேர்ந்த 58 வயதான நபர் என்றும், சுமார் 8 மணி நேரப் பயணத்தின் போது அவருக்கு கடுமையான ஆஸ்துமா பாதிப்பு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








