நேற்று ஏப்ரல் 14-ஆம் தேதி, மேற்கொள்ளப்பட்ட கைதிகள் இடமாற்றும் பணியில், எந்த ஒரு பாதுகாப்பு நடைமுறைகளும் மீறப்படவில்லை என்று சிறைத் துறை அறிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் வெளியான காணொளி ஒன்றில், இரண்டு பேருந்துகள் கொண்ட கைதிகள் இடமாற்றும் அணிவகுப்பிற்கு, முறையான போலீஸ் பாதுகாப்பு இல்லையென குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, சிறை நிர்வாகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
காஜாங் சிறையிலிருந்து கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள பல நீதிமன்றங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு கைதிகள் அழைத்துச் செல்லப்பட்டதாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த அணிவகுப்பில் இரண்டு பேருந்துகளும், முன்னணியில் ஒரு வேன் வாகனமும் இடம்பெற்றிருந்ததாகவும், பயணம் முழுவதும், சமிக்ஞை விளக்குகள் மற்றும் சைரன் ஒலி பயன்படுத்தப்பட்டு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதுடன், நிர்ணயிக்கப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகளுக்கு ஏற்ப சீராக நகர்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.
வாகனங்களுக்கு இடையிலான தூரமும் தொடர்ந்து பராமரிக்கப்பட்டது; எந்த வித இடையூறும் ஏற்படவில்லை என்பதையும் சிறை நிர்வாகம் சுட்டிக் காட்டியுள்ளது.
அதேவேளையில், பயணம் தொடங்கிய சிறிது நேரத்தில் வாகனம் ஒன்று பழுதடைந்த போதிலும், சிறைத் துறை அதிகாரிகள் முறையாக கைதிகளை குறித்த நேரத்தில் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.








