Jun 28, 2026
Thisaigal NewsYouTube
ஆறு எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு: கொலை வழக்கில் நால்வர் கைது
தற்போதைய செய்திகள்

ஆறு எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு: கொலை வழக்கில் நால்வர் கைது

Share:

ஜோகூர் பாரு, பிப்ரவரி.03-

ஜோகூர், ஸ்கூடாய், கங்கார் பூலாய் பகுதியில் செம்பனைத் தோட்டத்திலுள்ள பாழடைந்த வீடு ஒன்றிலிருந்து ஆறு மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதன் மூலம், முன்னதாக காணாமல் போனதாகப் புகாரளிக்கப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் மற்றும் ஒரு நபரின் மர்மம் விலகியுள்ளது.

ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அப்துல் ரஹமான் அர்சாட் கூறுகையில், கைது செய்யப்பட்டவர்களில் மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண் அடங்குவர். 19 முதல் 35 வயதுடைய மலேசியர்களான இவர்கள், ஜனவரி 21 அன்று இஸ்கண்டார் புத்ரி பகுதியில் பிடிபட்டனர்.

முதற்கட்ட விசாரணையில், இவர்கள் நால்வரும் போதைப் பொருள் பயன்படுத்தும் நண்பர்கள் என்பதும், இவர்கள் மீது ஏற்கனவே குற்றப் பின்னணி இருப்பதும் தெரிய வந்துள்ளது. "சிறுநீர் பரிசோதனையில் மூவருக்கு Methamphetamine போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதிச் செய்யப்பட்டுள்ளது," என்று ஜோகூர் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

கடந்த ஜனவரி 9-ஆம் தேதி, 48 வயதுடைய நபர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. நீண்ட நாட்களாகப் பிரிந்திருந்த தனது மனைவி மற்றும் குழந்தைகளைத் தேடி அந்த தோட்டத்து வீட்டிற்குச் சென்ற போது, அங்கு மனித எலும்புக்கூடுகள் இருப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

தடயவியல் சோதனையில் கண்டெடுக்கப்பட்ட ஆறு எலும்புக்கூடுகளில் இருவர் பெரியவர்கள் என்பது உறுதியானது. அவர்கள் 29 வயதுடைய ஒரு ஆடவர் மற்றும் 35 வயதுடைய ஒரு பெண் ஆவர். மற்ற நால்வர் அந்தப் பெண்ணின் பிள்ளைகள் - 17 வயது சிறுமி, 5 மற்றும் 9 வயதுடைய இரு சிறுமிகள் மற்றும் 2 வயது சிறுவன்.

பாதிக்கப்பட்ட அனைவரும் சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பே கொலை செய்யப்பட்டு, எரிக்கப்பட்டிருக்கலாம் என்று தடயவியல் துறை நம்புகிறது.

இந்த வழக்கு தொடர்பாக, இரு ஆண்கள் மீது குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். இதர இருவர் போலீஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று டத்தோ அப்துல் ரஹமான் அர்சாட் தெரிவித்தார்.

Related News