ஜெராந்துட், ஜனவரி.23-
பகாங், ஜெராந்துட், புலாவ் தாவாரில் சாலையின் குறுக்கே நின்றிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதியதில் அதன் 55 வயது ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை காலை சுமார் 10 மணியளவில், ஜெராந்துட் - புலாவ் தாவார் - ஜெங்கா 24 சாலையின் 24-வது கிலோமீட்டரில் நிகழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த அஹ்மாட் ஷாலாபாய் அப்துல் ஹாமிட் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்தில் சிக்கிய மற்றொரு லாரியின் 38 வயது ஓட்டுநர், சாலையோரம் மணலைக் கொட்டி விட்டு லாரியைத் திருப்ப முயன்றுள்ளார். அப்போது அந்த லாரி சாலையின் குறுக்கே நின்றபடி போக்குவரத்திற்குத் தடையாக இருந்துள்ளது
அந்தச் சமயம் நேராக வந்து கொண்டிருந்த அஹ்மாட் ஷாலாபாய், எதிர்பாராத விதமாக குறுக்கே நின்ற லாரி மீது மோதினார்.
இந்தக் கடுமையான மோதலில் அஹ்மாட் ஷாலாபாய் உயிரிழந்த வேளையில், குறுக்கே நின்ற லாரியின் ஓட்டுநர் எவ்விதக் காயமுமின்றி உயிர் தப்பினார். பலியானவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக ஜெராந்துட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது என்று ஜெராந்துட் மாவட்ட போலீஸ் தலைவர் முஹமட் அஸாஹாரி முக்தார் தெரிவித்தார்.








