சிரம்பான், நவம்பர்.26-
கடந்த நவம்பர் 19 ஆம் தேதி, சிரம்பான், நுசாரி பிஸ் செண்டாயானில் ஓர் உணவகத்திற்கு அருகில் சாலையோரத்தில் ஆடவர் ஒருவர் கை வெட்டப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவமானது, வன்முறை செயல்களில் ஈடுபடும் கும்பலுடன் தொடர்புடையதாகும்.
அந்த இந்திய ஆடவரை மடக்கியக் கும்பல் ஒன்று, அவரை வெட்டுக்கத்தியால் வெட்டியதுடன் துப்பாக்கியால் சுட்டத்தில் அவர் சம்பவ இடத்திலேயே மாண்டார்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் போலீசார் மேற்கொண்ட அதிரடி தேடுதல் நடவடிக்கையில் 30 க்கும் 40 க்கும் இடைப்பட்ட வயதுடைய நான்கு சந்தேகப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அல்ஸஃப்னி அஹ்மாட் தெரிவித்தார்.
முதலில் பிடிபட்ட இரண்டு நபர்களின் தடுப்புக் காவலுக்கான கால அவகாசம் இன்று முடிவடைந்த நிலையில் அந்த தடுப்புக் காவல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் போலீசார் இதுவரை பத்து பேரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். பிடிபட்ட நபர்கள் வன்முறைச் செயலில் ஈடுபடுவது, வீடு புகுந்து திருவது, போதைப் பொருள் கடத்துவது உட்பட பல்வேறு குற்றப்பதிவுகளைக் கொண்டுள்ளதாக டத்தோ அல்ஸஃப்னி அஹ்மாட் தெரிவித்தார்.








