கோலாலம்பூர், நவம்பர்.09-
தேன் தடவிய வலையில் சிக்கிய 23 வயது இளைஞர் ஒருவர், தான் நிர்வாணமாகப் பேசிய காணொலியை வெளியிட்டு விடுவதாக மிரட்டப்பட்டதால் 9 ஆயிரம் ரிங்கிட் இழந்த சோகச் சம்பவம் கோம்பாக் மாவட்டத்தில் நடந்துள்ளது. 'Tantan' என்ற டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான ஒரு பெண்ணுடன் WeChat வழியாகப் பழகிய அந்த இளைஞர், பின்னர் அந்தப் பெண்ணின் தூண்டுதலின் பேரில் வீடியோ அழைப்பில் ஆடைகளைக் களைந்துள்ளார்.
இந்தக் காணொளியை வைத்துக் கொண்டு, அந்தப் பெண் புலனம் வாயிலாகப் பணம் கேட்டு மிரட்டவே, பாதிக்கப்பட்ட இளைஞர் இரண்டு தவணைகளாக மொத்தம் 9 ஆயிரம் ரிங்கிட்டை ஒரு வங்கிக் கணக்குக்குச் செலுத்தியுள்ளதாக கோம்பாக் மாவட்டக் காவற்படையின் தலைவர், உதவி ஆணையர் நோர் அரிஃபின் முகமட் நாசீர் தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து காவற்படையினர் வழக்குப் பதிவுச் செய்து, அந்த மிரட்டலுக்குப் பயன்படுத்தப்பட்டத் தொலைபேசி எண்ணையும் வங்கிக் கணக்கின் உரிமையாளரையும் கண்டறியும் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.








