சிப்பாங், செப்டம்பர்.10-
கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் பெண் ஒருவரின் அழுகிய சடலத்தை போலீசார் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் லிமோ கார் நிறுத்தும் இடத்திற்கு அருகில் மீட்டுள்ளனர்.
கடந்த செப்டம்பர் முதல் தேதி இரவு 7.50 மணியளவில் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப் பெற்றத் தகவலை தொடர்ந்து போலீசார் அவ்விடத்திற்கு விரைந்ததாக கேஎல்ஐஏ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அஸ்மான் ஷாரியாட் தெரிவித்தார்.
T சட்டை, காற்சட்டை அணிந்த நிலையில் காணப்பட்ட அந்தப் பெண்ணின் சடலத்தின் தலை சிதைந்த நிலையில் காணப்பட்டது. அவர் ஒரு வாரத்திற்கு முன்பு இறந்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. செர்டாங் மருத்துவமனையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் அந்தப் பெண்ணின் உடலில் நான்கு இடங்களில் காயங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதால் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ஏசிபி அஸ்மான் குறிப்பிட்டார்.








