நாட்டில் இன்னும் திருமணம் ஆகாமல் முதிர் கன்னிகளாக இருந்து வரும் பெண்களின் பிரச்னையை தீர்ப்பதற்கு முஸ்லிம் ஆண்கள், ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பாஸ் கட்சித் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான், நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ள யோசனைக்கு கண்டனங்கள் வலுத்துவருகின்றன.
மக்களின் பொருளாதார சிரமங்கள் மற்றும் வாழ்க்கை செலவினங்கள் உயர்ந்து வரும் வேளையில் அவற்றுக்கு தீர்வு காண்பதற்கான யோசனைகளையும், வழிமுறைகளையும் நாடாளுமன்றத்தில் முன்வைக்காமல் திருமணம் ஆகாமல் இருக்கும் முதிர்கன்னிகள் விவகாரம்தான் தற்போது நாட்டு மக்களின் தலையாயப் பிரச்னையா? என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.
மதவாத கட்சியான பாஸ் கட்சியை சேர்ந்த 63 வயதுடைய தலைவர் முன்வைத்துள்ள யோசனையானது, அக்கட்சி தலைவர்களின் குறுகிய சிந்தனையே காட்டுகிறது என்று சமூகவலைத்தளங்களில் அந்த தலைவரை மக்கள் வறுத்தெடுக்கின்றனர்.
தங்களை மதவாதி என்று கூறிக்கொள்ளும் ஒரு தலைவர்களிடமிருந்து வருகின்ற இத்தகைய இழிவான யோசனைளும், வார்த்தைகளும் தங்களால் நம்ப முடியவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.








