கோலாலம்பூர், ஆகஸ்ட்.20-
கடந்த வாரம் முன்னாள் பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லியின் மகன் மீது நடத்தப்பட்ட தாக்குதலுடன் தன்னைத் தொடர்புபடுத்தி, எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இன்று போலீசில் புகார் அளித்துள்ளார்.
கடந்த திங்களன்று ஒரு பேஸ்புக் பக்கத்தில் வெளிவந்துள்ள தகவல் தொடர்பில் அதனை இயக்குபவர் அல்லது உரிமையாளர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இஸ்மாயில் சப்ரியின் உதவியாளர் கோலாலம்பூர், டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அத்துடன் தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா ஆணையமான எம்சிஎம்சியிலும் புகார் அளித்துள்ளர்.
ரஃபிஸியின் மகன் மீது நடத்தப்பட்ட தாக்குதலுடன் தம்மைத் தொடர்புபடுத்துவது போல் அமைந்துள்ள அந்த பேஸ் புக் பதிவின் உள்ளடக்கம், முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்றும், தனது நற்பெயரைக் கெடுக்கும் வகையில் தீங்கிழைக்கும் நோக்கம் கொண்டது என்றும் இஸ்மாயில் வலியுறுத்தினார்.








