கோலாலம்பூர், அக்டோபர்.16-
எஸ்டிபிஎம் தேர்வில் சிறந்த மதிப்பெண்களைப் பெறும் உள்ளூர் மாணவர்கள், பொதுப் பல்கலைக்கழகங்களில் தாங்கள் படிக்க விரும்பும் துறைகளில் சேர்வதிலிருந்து அவர்கள் ஓரங்கட்டப்படக்கூடாது. மாறாக, அவர்களின் அடைவு நிலைக்கு ஏற்ப பட்டப்படிப்பிற்கான நியாயமான கல்வி வாய்ப்புகள் வழங்கப்படுவதை உயர்க்கல்வி அமைச்சு உறுதிச் செய்ய வேண்டும் என்று கிள்ளான் எம்.பி. வீ. கணபதிராவ், நாடாளுமன்றத்தில் சிறப்பு அவையில் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது பொது பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்ப்பு முறையில் கையாளப்படும் அணுகுமுறை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
பொது பல்கலைக்கழகங்களில் இடம் கேட்டு ஒரு லட்சத்து தொள்ளாயிரத்து 866 மாணவர்கள் விண்ணப்பம் செய்தனர். யுபியு மூலமாக 78 ஆயிரத்து 883 மாணவர்களுக்கு மட்டுமே இடம் கிடைத்துள்ளது. எஸ்டிபிஎம் தேர்வில் சிறந்த அடைவு நிலையைப் பதிவுச் செய்து, CGPA 4.00 புள்ளிகளைப் பெற்ற ஆயிரத்து 255 மாணவர்கள் தாங்கள் விரும்பிய துறைகளில் இடம் கிடைப்பதில் தோல்வி கண்டுள்ளனர்.
இந்நிலையில் அனைத்து மாணவர்களுக்கும், குறிப்பாக எஸ்டிபிஎம் வாயிலாக கடுமையாகத் தங்கள் உழைப்பை வழங்கி, சிறப்பு அடைவு நிலையைப் பெற்ற மாணவர்களுக்கு உண்மையிலேயே அவர்கள் பெற்ற தகுதி அடிப்படையில் நியாயமான இட வாய்ப்பு வழங்கப்படுவதை உறுதிச் செய்வதற்கு பொது பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்ப்புக்கு தற்போது கையாளப்படும் அணுகுமுறை மறுபரீசிலனை செய்யப்பட வேண்டிய அவசியத்தை இந்த எச்சரிக்கை உணர்த்துகிறது என்று கணபதி ராவ் வலியுறுத்தினார்.
கட்டண முறை வாயிலாக மாணவர் சேர்ப்பு மற்றும் வெளிநாட்டு மாணவர்களின் அதிகரிப்பு ஆகியவை உள்ளூர் மாணவர்களின் பட்டப்படிப்பிற்கான கல்வி வாய்ப்புகளைப் பாதிக்கின்றன. சில பட்டப்படிப்புகளில் வகுப்பறைகளில் கிட்டத்தட்ட பாதி பேர் வெளிநாட்டு மாணவர்களாக உள்ளனர். இது உண்மையிலேயே அச்சத்தை ஏற்படுத்துகிறது என்று கணபதிராவ் சுட்டிக் காட்டினார்.
இந்நிலையில் எஸ்டிபிஎம் சிறந்த அடைவு நிலையைப் பெற்ற மாணவர்களுக்கு, பொது பல்கலைக்கழகங்களில் இடம் கிடைக்காமல் போவதற்கானக் காரணம் என்ன?
மாணவர் சேர்ப்பு முறை, உண்மையிலேயே தகுதி அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறதா?
கட்டண முறையில் மாணவர் சேர்ப்பு முறை மறுமதிப்பாய்வு செய்யப்படுமா?
மாணவர் சேர்ப்பு முறை தொடர்பான தரவுகள் வெளிப்படையாக வெளியிட முடியுமா?
வெளிநாட்டு மாணவர்கள் சேர்ப்பு முறையில் வரம்பு நிர்ணயிக்கப்படுமா?
எஸ்டிபிஎம் மற்றும் மெட்ரிகுலேஷன் இடையிலான சமநிலை மதிப்பாய்வு செய்யப்படுமா?
பொதுப் பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு மாணவர் நுழைவுத் தேர்வான CUEE முறை அமல்படுத்தப்படுமா? என்பது தொடர்பான முக்கியக் கேள்விகளுக்கு உயர்க்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கணபதிராவ் வலியுறுத்தினார்.
காரணம், கல்வி என்பது அனைத்து மலேசியர்களுக்கும் ஓர் உரிமையாகும். அந்த கல்வி முறை நியாயமானதாகவும், வெளிப்படையானதாகவும், தகுதி அடிப்படையிலானதாகவும் இருப்பதை நாம் உறுதிச் செய்ய வேண்டும் என்று உயர்க்கல்வி அமைச்சை கணபதிராவ் கேட்டுக் கொண்டார்.








