சுங்கை பட்டாணி, நவம்பர்.27-
கெடா சுங்கை பட்டாணியில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளியின் தங்கும் விடுதியில் நண்பரைத் தவறாகப் பேசி விட்டான் என்பதற்காக மாணவர்கள் கூட்டு சேர்ந்து 16 வயது மாணவன் ஒருவனைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் நான்கு மாணவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

தாக்குதலைத் தாங்கிக் கொள்ள முடியாமல் மாணவன் மயங்கி விழும் வரை அடித்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் தொடர்பில் நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டதாக கோலா மூடா மாவட்ட தலைமை காவல்துறை அதிகாரி ஏசிபி ஹன்யான் ரம்லான் தெரிவித்தார்.

இச்சம்பவம் கடந்த நவம்பர் 24 ஆம் தேதி இரவு நேரத்தில் பள்ளியின் தங்கும் விடுதியில் நிகழ்ந்தது. தாக்கப்பட்ட 16 வயது மாணவன் பள்ளி தங்கும் விடுதியில் கழிப்பறையில் மயங்கி விழுந்து கிடந்ததைக் கண்ட ஆசிரியர்கள் அந்த மாணவனின் தாயாருக்குத்ன் தகவல் அளித்துள்ளனர்.

தனது தாயாரால் உடனடியாக பொதுமருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைப் பெற்றதில் அம்மாணவனின் வயிற்றுப் பகுதியில் பலமான காயங்கள் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் உறுதிச் செய்து இருக்கின்றனர் என்று ஏசிபி ஹன்யான் ரம்லான்தெரிவித்தார்.
இந்தத் தாக்குதல் தொடர்பில் மாணவனின் தாயார் போலீசில் புகார் அளித்துள்ளார். பிடிபட்ட நான்கு மாணவர்களில் ஒருவரை மட்டும் தடுப்புக் காவலில் வைப்பதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதர மூன்று மாணவர்கள் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக ஏசிபி ஹன்யான் ரம்லான் குறிப்பிட்டார்.








