ஈப்போ, ஜனவரி.24-
Baba Nyonya செட்டி சமூகத்தினரை தேசிய ஒற்றுமையின் அடையாளங்களாக அங்கீகரிப்பது குறித்த முன்மொழிவுகளைப் பரிசீலிக்க தேசிய ஒற்றுமை அமைச்சு தயாராக உள்ளது என்று அதன் அமைச்சர் டத்தோ ஏரோன் அகோ டகாங் தெரிவித்துள்ளார்.
இன்று ஈப்போவில் நடைபெற்ற 10 ருக்குன் தெத்தாங்கா பகுதிகளுக்கு நிதி ஒதுக்கீடு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் டத்தோ ஏரோன் அகோ டாகாங் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைத் தெரிவித்தார்.
"ஒற்றுமைக்கான அடையாளங்களாகப் பல நபர்கள் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். உதாரணமாக, 2023-இல் தேசிய ஒற்றுமை சின்னமாக அறிவிக்கப்பட்ட ஒலிம்பிக் நீச்சல் வீராங்கனை Pandelela Rinong- கைச் சொல்லலாம். இது போன்ற தனிநபர்கள் அல்லது சமூகங்களை ஒற்றுமையின் சின்னங்களாக எவ்வாறு முன்னிலைப்படுத்தலாம் என்பதை நாங்கள் ஆராய்வோம்," என்றார் அமைச்சர்.
மேலும், "பொதுமக்களிடமிருந்து அமைச்சுக்கு பல ஆலோசனைகள் வந்துள்ளன. ஒற்றுமைக்கு பங்களித்த தேசியத் தலைவர்களை அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் அவற்றில் அடங்கும். சில சமயங்களில் அவர்கள், Icon எனப்படும் 'சின்னங்கள்' என்பதை விட 'ஒற்றுமையின் ஏஜெண்டுகள்' என்று அழைக்கப்படுகிறார்கள்," என்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, கடந்த ஜனவரி 21-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையின் போது, Baba Nyonya மற்றும் செட்டி சமூகங்களை ஒற்றுமையின் சின்னங்களாக உயர்த்த வேண்டும் என்று Tangga Batu எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பக்ரி ஜமாலுடின் வலியுறுத்தியிருந்தார். 15-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே இந்த இனக்குழுக்கள் மலாக்காவிற்கு வந்து உள்ளூர் சமூகங்களுடன் இணைந்து வாழ்ந்து வந்த வரலாற்றை அவர் சுட்டிக் காட்டினார்.








