கோலாலம்பூர், ஜனவரி.07-
இராணுவத் தளவாடங்கள் மற்றும் பராமரிப்பு தொடர்பான குத்தகை முறைகேடுகள் குறித்த விசாரணையில் 2.4 மில்லியன் ரிங்கிட் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம், தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கோடு தொடர்புடைய நபர் ஒருவர், ஒரு வீட்டிலிருந்து மற்றொரு வீட்டிற்குப் பணத்தை ரகசியமாக மாற்ற முயன்ற போது, எஸ்பிஆர்எம் அதிகாரிகளால் அந்த 2.4 மில்லியன் ரிங்கிட் ரொக்கம் இடைமறித்துக் கைப்பற்றப்பட்டது என்று அஸாம் பாக்கி விளக்கினார்.
மலேசிய இராணுவத்தின் விநியோகம் மற்றும் பராமரிப்புத் திட்டங்களைப் பெறுவதற்காக லஞ்சம் கொடுத்ததாகச் சந்தேகிக்கப்படும் 26 நிறுவனங்கள் குறித்து தற்போது விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக நேற்று ஜனவரி 6 ஆம் தேதி 17 நிறுவன இயக்குநர்களான 9 ஆண்களும், 8பெண்களும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இன்று முதல் ஜனவரி 10-ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் போலீஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அஸாம் பாக்கி குறிப்பிட்டார்.
சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், இராணுவ உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து குத்தகைகளைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கு 2009 ஆம் ஆண்டு எஸ்பிஆர்எம் சட்டம் பிரிவு 16 கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இராணுவத் தளவாடக் கொள்முதல் மற்றும் குத்தகை முறைகளில் நடந்துள்ள ஊழல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகத்தைத் தடுக்கும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அஸாம் பாக்கி உறுதிப்படுத்தியுள்ளார்.








