கோலாலம்பூர், அக்டோபர்.25-
முன்னாள் பிரதமர் டான் ஶ்ரீ முகைதீன் யாசின் மருமகன் அட்லான் பெர்ஹானின் வெளிநாட்டு சொத்துகளை முடக்குவதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் திட்டம் கொண்டுள்ளது.
அட்லான் பெர்ஹானின் வெளிநாட்டுச் சொத்துகள் தற்போது அடையாளம் காணப்பட்டு வருகின்றன. அவரின் மலேசிய சொத்துகள் அனைத்தும் முடக்கப்பட்டு விட்டன. தற்போது வெளிநாட்டில் அவரின் சுகவாழ்வுக்கு ஆதாரமாக இருக்கும் சொத்துகளை முடக்குவதற்கு எஸ்பிஆர்எம் உத்தேசித்துள்ளதாக அதன் துணை தலைமை ஆணையர் அஹ்மாட் குசைரி யஹாயா தெரிவித்தார்.
மலேசியாவில் அட்லான் பெர்ஹானின் சொத்துகள் என்று கருதப்படக்கூடிய அவரின் வங்கி கணக்குகள் உட்பட அனைத்து சொத்துகளும் முடக்கப்பட்டு விட்டதாக அஹ்மாட் குசைரி குறிப்பிட்டார்.
லஞ்ச ஊழல் தொடர்பில் தேடப்பட்டு வரும் ஒரு தொழில் அதிபரான அட்லான் பெர்ஹான் வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த போதிலும், அவர் சுகவாழ்வுடன் இருக்கிறார் என்று எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி தெரிவித்து இருந்தார்.
அட்லான் பெர்ஹான், மத்திய கிழக்கில் உள்ள ஒரு நாட்டில் இருப்பதாக நம்பப்படுகிறது. அங்கிருந்து தாய்லாந்தைத் தவிர மற்ற நாடுகளுக்கு அவர் பயணம் மேற்கொண்டுள்ளார். அந்நாடுகளின் பயணத்தின் போது அவர் கோல்ஃப் விளையாடி இருக்கிறார் என்று அஸாம் பாக்கி குறிப்பிட்டு இருந்தார்.








