ஷா ஆலாம், டிசம்பர்.14-
சீனாவின் புகழ்பெற்ற Tsinghua பல்கலைக்கழகம், Peking பல்கலைக்கழகம், Shanghai Jiao Tong பல்கலைக்கழகம் போன்ற உயர்தரப் பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு ஒருங்கிணைந்த தேர்வுச் சான்றிதழ் யுஇசி கட்டாயத் தகுதி அல்ல என்று மாரா தலைவர் டத்தோ டாக்டர் அஷ்ராஃப் வாஜ்டி டுசுகி உறுதிப்படுத்தியுள்ளார். அவர் சீனப் பல்கலைக்கழகங்களுடன் நடத்திய பேச்சு வார்த்தையின் அடிப்படையில் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
இதன் விளைவாக, எஸ்பிஎம் தேர்வில் சிறந்து விளங்கும் மாணவர்களைச் சீனாவுக்கு மாரா அனுப்பத் தொடங்கியுள்ளது. மேலும், எம்ஆர்எஸ்எம் பள்ளிகள், எஸ்பிஎம்மில் சிறந்த தேர்ச்சி பெற்று அரபு, மண்டரின், பிரெஞ்சு, ஜெர்மன், ஜப்பானிய, அல்லது கொரிய மொழிகளில் ஒன்றில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, அந்தந்த நாடுகளில் உள்ள உலகின் முன்னணிப் பல்கலைக்கழகங்களுக்குச் சென்று படிக்க முன்னுரிமையும் நிதியுதவியும் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். எதிர்காலத் தலைமுறையினர் அதிகமான மொழிகளில் தேர்ச்சி பெறுவதன் மூலம் தொழில்நுட்பப் பரிமாற்றமும், பன்னாட்டு வர்த்தக வலையமைப்பை வலுப்படுத்துவதுமே இதன் நோக்கம் என்று அவர் கூறினார்.








