கோலாலம்பூர், அக்டோபர்.02-
கோலாலம்பூர், ஜாலான் துன் ரசாக்கில் உள்ள அமெரிக்கத் தூதகரத்தின் முன்புறம் இன்று நடத்தப்பட்ட இஸ்ரேலுக்கு எதிரான ஆர்ப்பாட்டம், அமளிதுமளியில் முடிந்தது.
இஸ்ரேலுக்கு எதிராக தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தும் பொருட்டு, அமெரிக்க தூதரகத்திற்கு முன் குழுமியவர்கள், தூதரகக் கட்டடத்திற்குச் செல்லும் சாலையை வழிமறித்துக் கொண்டதால் போலீசார் தலையிட வேண்டிய சுழல் ஏற்பட்டது.
தூதரகத்திற்குச் செல்லும் சாலையை வழிமறிக்க வேண்டாம் என்று போலீசார் ஆலோசனை கூறியும், அதனை யாரும் பொருட்படுத்தாததைத் தொடர்ந்து போலீசார் தலையிட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
அப்போது பங்கேற்பாளர்களுக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசாருக்கு எதிராக சினமூட்டும் செயலில் ஈடுபட்ட சிலர் கைது செய்யப்பட்டனர்.








