கோலாலம்பூர், செப்டம்பர்.20-
நாட்டில் 23 லட்சம் பேரின் வாகனமோட்டும் லைசென்ஸ் செயல்பாட்டில் இல்லை என்று போக்குவரத்து இலாகாவான ஜேபிஜே அறிவித்துள்ளது.
வாகனமோட்டும் லைசென்ஸின் செல்லத்தக்க காலக்கெடு முடிவடைந்து, அது தொடர்ந்து புதுப்பிக்கப்படவில்லை அல்லது மூன்று ஆண்டுகளுக்கு மேலாக அது செயல்பாட்டில் இல்லை என்பது ஜேபிஜேவின் தரவுகள் காட்டுவதாக அதன் தலைமை இயக்குநர் டத்தோ ஏடி ஃபாட்லி ரம்லி தெரிவித்தார்.
லைசென்ஸ் புதுப்பிக்கப்படாமலேயே அதனைத் தொடர்ந்து வாகனமோட்டுவதற்கு பயன்படுத்தப்படுமானால் அது பெரும் குற்றமாகும். அதனால், அவர்களுக்கு மட்டுமின்றி, இதர வாகனமோட்டிகளுக்கும் இடரை ஏற்படுத்தலாம் என்று அவர் எச்சரித்தார்.
1987 ஆம் ஆண்டு போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் சாலையைப் பயன்படுத்தும் வாகனங்களுக்கு தனிநபர்கள் அனைவருமே செல்லத்தக்க வாகனமோட்டும் லைசென்ஸ் கொண்டிருக்க வேண்டும் என்று டத்தோ ஏடி ஃபாட்லி வலியுறுத்தினார்.








