கோலாலம்பூர், டிசம்பர்.11-
மலேசிய ரிங்கிட் இன்று டிசம்பர் 11 ஆம் தேதி அமெரிக்க டாலருக்கு எதிராக வலுவான உயர்வை எட்டியுள்ளது.
இந்த உயர்வானது, மலேசிய ரிங்கிட் மதிப்பில் புதிய உச்சமாகக் கருதப்படுகிறது. ஒரு அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு 4 ரிங்கிட் 10 காசு என்ற நிலைக்கு உயர்ந்ததுள்ளது. இது கடந்த நான்கரை ஆண்டுகளில் காணப்படாத மிகப் பெரிய உயர்வாகும்.
அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் பேங்க், வட்டி விகிதங்களைக் குறைத்ததைத் தொடர்ந்து, உலகளவில் அமெரிக்க டாலரின் மதிப்பு பலவீனமடைந்ததே ரிங்கிட் வலுப்பெற முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
இன்று அந்நியச் செலாவணி வர்த்தகத்தில் மாலை 6 மணி நிலவரப்படி, ரிங்கிட் 4.10 என்ற அளவில் முடிவடைந்தது. இது நேற்று முடிவடைந்த ரிங்கிட் 4.11 என்ற மதிப்பை விடக் கூடுதல் மதிப்பாகும்.
மலேசியாவின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் முதலீட்டாளர்களின் சாதகமான மனநிலை காரணமாக, ரிங்கிட் கடந்த எட்டு நாட்களாகத் தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது.
அந்நியச் செலாவணி விகிதத்தை அன்றாடம் கண்டறியவும், சரிபார்க்கவும் பேங்க் நெகாரா மலேசியா அல்லது மேபேங்க் போன்ற அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளங்களை மக்கள் பார்வையிடலாம்.








