மலேசிய இந்திய மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் முன்னெடுத்துள்ள 'கல்வி யுத்தம்' நிகழ்வு பினாங்கு, பிறையில் நேற்ற மிகச் சிறப்பாக நடைபெற்றது. பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தர்ராஜூ சோமு இந்நிகழ்வை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து, இந்திய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்குச் சமூக அமைப்புகள் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்
44 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த டான்ஸ்ரீ டாக்டர் தம்பிராஜாவினால் உருவாக்கப்பட்ட ஸ்ரீ முருகன் கல்வி நிலையில் கல்வி ரீதியாக நல்ல மனிதர்களையும் தலைவர்களையும் தந்துள்ளது. தங்கள் பிள்ளைகளுக்கு கல்வி முக்கியத்துவத்தை பெற்றோர்கள் மத்தியில் உணரசெய்துள்ளது என்று டத்தோஸ்ரீ சுந்தராஜு தெரிவித்தார்.
ஸ்ரீ முருகன் நிலைய இயக்குனர்சுரேன் கந்தா கூறுகையில், டான்ஸ்ரீ டாக்டர் தம்பிராஜாவினால் கடந்த 1982 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கல்வி யுத்தத்தின் மூலம் ஸ்ரீ முருகன் நிலையம் ஏறத்தாழ 57 ஆயிரம் பட்டதாரி மாணவர்களை உருவாக்கியுள்ளது என்றார்.
இந்த கல்வி யுத்தம் சாதாரமாணது அல்ல. ஒவ்வொரு மாணவருக்குள் அடங்கி கிடக்கும் ஒரு சக்தியை தட்டியெழுப்பும் தருணத்திற்குரிய கல்வி யுத்தமாகும் என்று ஸ்ரீ முருகன் நிலையத்தின் வட மாநிலங்களுக்கான இயக்குனர் டாக்டர் ஜெ. சுமதி தெரிவித்தார்.
பினாங்கு மாநில ஸ்ரீ முருகன் நிலையத்தின் ஆலோசகரும் எம். சி. பி. எப். அறவாரியத்தின் பினாங்கு மாநில துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ புழேந்திரன் தமது உரையில் இந்திய சமுதாயத்தின் வளரச்சிக்காக ஸ்ரீ முருகன் நிலையம் போன்ற பல சமுக அமைப்புகள் தொடர்ந்து சேவையை வழங்கி வருவது மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார்.
இந்த கல்வியுத்த நிகழ்வில் எஸ்.பி.எம். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கும், உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
தங்கள் பிள்ளைகளைப் பட்டதாரிகளாக்கிச் சிறந்த நிலைக்குக் கொண்டு வந்த சுப்பிரமணியம் - வசந்தா தம்பதியினருக்குச் சிறப்புச் செய்யப்பட்டது.
கல்வி யுத்த நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் எல். கிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் துணை அமைச்சர் டத்தோஸ்ரீ எஸ். கே. தேவமணி, நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் , செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன், பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கெல்வின், பினாங்கு மாநில ஊழல் தடுப்பு ஆணையத்தின் இயக்குனர் டத்தோ கருணாநிதி உட்பட பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.













