தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, நாளை நவம்பர் 6 மற்றும் 7 ஆகிய இரண்டு நாட்களுக்கு நெடுஞ்சாலைகளில் 50 விழுக்காடு சுங்கச்சாவடி கட்டணத் தள்ளுபடி வழங்கப்படும் என மடானி அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி, நவம்பர் 6-ஆம் தேதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் நவம்பர் 7-ஆம் தேதி சனிக்கிழமை இரவு 11.59 மணி வரை இந்தக் கட்டணச் சலுகை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை நிறுவனங்களுக்கு அரசாங்கம் சுமார் 20.11 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழங்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சலுகை அனைத்து சுங்கச்சாவடிகளிலும் தனியார் வாகனங்களுக்கான முதல் வகுப்பு வாகனங்களுக்கும், பினாங்கு பாலத்தில் இரண்டாம் வகுப்பு வாகனங்களுக்கும் வழங்கப்படும்.
இருப்பினும், வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் உள்ள பங்குனான் சுல்தாம் இஸ்கண்டார் சுங்கச்சாவடி மற்றும் லிங்கெடுவா நெடுஞ்சாலையில் உள்ள தங்சோங் குப்பாங் சுங்கச்சாவடி ஆகிய எல்லைப் பகுதிகளுக்கு இந்தச் சலுகை பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த நடவடிக்கையானது, தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்வோர் மற்றும் குடும்பத்தினரைச் சந்திக்கப் பயணிப்போரின் செலவைக் குறைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அலெக்ஸண்டர் நந்தா லிங்கி தெரிவித்துள்ளார்.
மேலும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, முன்கூட்டியே பயணத்தைத் திட்டமிடுமாறும், டச் அண்ட் கோ (Touch ’n Go) அட்டை மற்றும் இ-வாலட் (eWallet) கணக்குகளில் போதிய பண இருப்பை உறுதி செய்யுமாறும் பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.








