சிரம்பான், ஜூலை.30-
போதைப்பொருள் கடத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட பணி ஓய்வுப் பெற்ற முன்னாள் போலீஸ்காரரை, எதிர்வாதம் புரியும்படி சிரம்பான் உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
அமினுடின் அமின் என்ற 66 வயதுடைய அந்த போலீஸ்காரருக்கு எதிரான குற்றச்சாட்டில் அடிப்படை முகாந்திரங்கள் உள்ளன என்பதில் பிராசிகியூஷன் தரப்பு நிரூபித்துள்ளதாக நீதிபதி ரோஹானி இஸ்மாயில் தெரிவித்தார்.
எனவே தனது தரப்பு வாதத்தை முன் வைப்பதற்கு அந்த முன்னாள் போலீஸ்காரர் எதிர்வாதம் புரிய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிடுவதாக ரோஹானி இஸ்மாயில் குறிப்பிட்டார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி நெகிரி செம்பிலான், ஜெம்போல், கம்போங் புக்கிட் கெர்டாஸ் என்ற இடத்தில் உள்ள தனது வீட்டிற்குப் பின்னால் அந்த முன்னாள் போலீஸ்காரர் 573 கிராம் போதைப்பொருளைத் தன் வசம் வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டார்.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை அல்லது கூடியபட்சம் 40 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் 1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.








