கோலாலம்பூர், ஜனவரி.21-
மலேசியாவின் 'மடானி' அரசாங்கம், வீட்டுக்கடன் உத்தரவாதத் திட்டமான SJKP கீழ் இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு லட்சம் பேர், தங்களின் சொந்த வீட்டைப் பெறுவதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளதாக வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சர் ங்கா கோர் மிங் அறிவித்துள்ளார்.
இதற்காக, 2025-ஆம் ஆண்டில் இத்திட்டத்திற்கான நிதியுதவி உத்தரவாத வரம்பை அரசாங்கம் மேலும் 10 பில்லியன் ரிங்கிட்டாக அதிகரித்துள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம், 2008-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இத்திட்டத்தின் மொத்த உத்தரவாத மதிப்பு 40 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்துள்ளது. கடந்த செப்டம்பர் 2025 நிலவரப்படி, சுமார் 23.17 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடன்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, 97 ஆயிரத்து 180 தனிநபர்கள் தங்களின் கனவு இல்லத்தைப் பெற்றுள்ளனர் என்று ங்கா கோர் மிங் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துளளார்.
இந்த SJKP திட்டம் குறிப்பாக B40 மற்றும் M40 பிரிவினரை நோக்கமாகக் கொண்டது. நிலையான வருமானம் அல்லது முறையான சம்பளப் பட்டியல் இல்லாத 'கிக் எகானமி' ஊழியர்கள் மற்றும் இளைஞர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும் என ங்கா கோர் மிங் வர்ணித்துள்ளார்.
இத்திட்டத்தின் கீழ் முதல் முறையாக வீடு வாங்குபவர்களுக்கு 5 லட்சம் ரிங்கிட் வரை நிதியுதவி உத்தரவாதம் வழங்கப்படுகிறது. மேலும், ஆரம்பக் கட்டணச் சுமையைக் குறைக்க 'SJKP MADANI' மூலம் வீட்டின் விலையில் 120 விழுக்காடு வரை நிதியுதவி வழங்கப்படுவதுடன், முதல் 3 முதல் 5 ஆண்டுகளுக்குக் குறைந்த மாதாந்திர தவணையைச் செலுத்தும் 'ஸ்டெப்-அப் ஃபைனான்சிங்' (Step-Up Financing) முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து வங்கிகளும் இந்தத் திட்டத்திற்கு ஆதரவளிப்பதை உறுதிச் செய்ய, மலேசிய மத்திய வங்கியான பேங்க் நெகாராவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அமைச்சர் ங்கா கோர் மிங் தெரிவித்தார்.
வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சு, இத்திட்டத்தை உன்னிப்பாகக் கண்காணித்து, மலேசிய மக்களின் நலனுக்காக உள்ளடக்கிய மற்றும் நிலையான நிதியுதவி முறையை உறுதிச் செய்யும். வெறும் வீடுகளை வழங்குவது மட்டுமல்லாமல், மக்கள் எளிதாக நிதி வசதி பெறுவதை உறுதிச் செய்வதே 'மலேசியா மடானி' கொள்கையின் முக்கிய நோக்கமாகும் என்று ங்கா கோர் மிங் தெளிவுபடுத்தினார்.








