சிங்கப்பூர், டிசம்பர்.30-
கடந்த டிசம்பர் 22-ஆம் தேதி, சிங்கப்பூர் வூட்லென்ஸ் சோதனைச் சாவடியில், போதைப் பொருளைக் கடத்த முயன்ற குற்றச்சாட்டில், 39 வயதுடைய மலேசியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் மேற்கொண்ட சோதனையில், 3 கிலோவிற்கும் அதிகமான கஞ்சா மற்றும் 1.7 கிலோ 'ஐஸ்' என்றழைக்கப்படும் Methamphetamine போன்ற போதைப் பொருட்களைப் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூரில் போதைப் பொருள் தவறான பயன்பாடு சட்டத்தின் கீழ், 250 கிராமிற்கு மேற்பட்ட Methamphetamine அல்லது 500 கிராமிற்கு அதிகமான கஞ்சாவை இறக்குமதி அல்லது ஏற்றுமதி செய்வோருக்கு மரண தண்டனை விதிக்கப்படுவது உறுதி.
இந்நிலையில், கடந்த டிசம்பர் 22-ஆம் தேதி மாலை, முன்கூட்டியே கிடைத்த தகவலின் அடிப்படையில், வூட்லென்ஸ் சோதனைச் சாவடியில், அந்நபரிடம் தீவிர சோதனை நடத்தப்பட்டதாக அந்நாட்டு குடிநுழைவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அப்போது அவரிடமிருந்து 7 கறுப்புப் பொட்டலங்களில் போதைப் பொருட்களானது பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சுமார் 2 லட்சத்து 37 ஆயிரம் டாலர்கள் மதிப்புடைய அந்த போதைப் பொருட்களானது, சுமார் 1440 பேரை போதைப் பித்தர்களாக்கும் தன்மை கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.








