நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தனது அண்டை வீட்டாரைக் கொடூரமான முறையில் வெட்டிக் கொன்ற முன்னாள் லாரி ஓட்டுநருக்கு, கிள்ளான் உயர்நீதிமன்றம் இன்று 35 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 12 பிரம்படிகளும் விதித்து தீர்ப்பளித்தது.
42 வயதான எஸ். பன்னீர்செல்வம் என்பவர், கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 13-ஆம் தேதி காலை 10.30 மணியளவில், கிள்ளான் 'ஜாலான் தெப்பி சுங்கை' பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன், 52 வயதான முகமது ஹபீஸ் அப்துல்லா என்பவரை வெட்டிக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டார்.
அதே வேளையில், 46 வயதான நிங் ஹுய் சான் என்ற பெண்மணியைப் பாராங்கினால் தாக்கு காயப்படுத்தியதற்காக பன்னீர்செல்வத்துக்கு கூடுதலாக 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்த இரு தண்டனைகளையும் ஏககாலத்தில் அனுபவிக்க நீதிபதி நோர்லிசா ஒஸ்மான் உத்தரவிட்டார்.
முன்னதாக பன்னீர் செல்வத்துக்கு மரணத் தண்டனை விதிக்கும்படி அரசு தரப்பு வழக்கறிஞர் ஃபாரா அகிலா அகமட் ஃபுவாட் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார். சிசிடிவி காட்சிகளின்படி, பாதிக்கப்பட்டவர் தற்காத்துக் கொள்ள முடியாத நிலையிலும் அவரைப் பன்னீர்செல்வம் கொடூரமாகத் தாக்கியதைச் சுட்டிக்காட்டி மரண தண்டனை கோரினார். இருப்பினும், குற்றம் சாட்டப்பட்டவர் தனது செயலுக்கு வருந்துவதாகத் தெரிவித்ததை அடுத்து, நீதிமன்றம் இந்தச் சிறைத்தண்டனையை உறுதி செய்தது.








