Dec 5, 2025
Thisaigal NewsYouTube
கெடா மாநிலத்தில் முஸ்லிம் அல்லாதவர்களின் உரிமைகள் பறிக்கப்படாது
தற்போதைய செய்திகள்

கெடா மாநிலத்தில் முஸ்லிம் அல்லாதவர்களின் உரிமைகள் பறிக்கப்படாது

Share:

கெடா மாநிலத்தில் அண்மைய காலமாக லங்காவி மாவட்டத்தில் மக்கள் கட்டொழுங்கு மிக்க நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுப்பட வேண்டும் என்று கெடா மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமாட் சனுசி முகமட் நூர் கூறிய கருத்து மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை வருகிறது.

ஆனால், அக்கருத்து லங்காவியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முஸ்லிம்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று கெடா மாநில இந்தியர் , சீனர் மற்றும் சயாமிய ச​மூகங்களுக்கான ஆட்சிக் குழு உறுப்பினரும் கூலிம் சட்டமன்ற உறுப்பினருமான வோங் சியா ஜென் ( Wong Chia Zhen ) விளக்கம் அளித்துள்ளார்.

லங்காவியில் மதுபானம் அருந்த முடியாது என்றும், நாகரிகமற்ற உடைகள் அணிவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் மந்திரி பெசார் முகமாட் சனுசி வலியுறுத்தியிருந்தது, முஸ்லிம்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ஓர் அறிவுறுத்தலாகும் என்று வோங் சியா ஜென் தெளிவுபடு​த்தினார்.

இது முஸ்லிம் அல்லாதவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை அல்ல. ஆனால், முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் இக்கருத்து பொருந்தும் என்பதைப் போல மந்திரி ​பெசாரின் உட்கருத்தை தவறாக புரிந்து கொண்டு, கெடா மாநில அரசின் நற்பெயருக்கு​ களங்கத்தை ஏற்படுத்த வேண்டாம். மக்களிடையே ஒற்றுமையை சீர்குலைக்க வேண்டாம் என்று வோங் சியா ஜென் அறிவுறுத்தினார்.

கெடா மாநில அரசைப் பொறுத்தவரையில் முஸ்லிம் அல்லாதவர்களின் உரிமைகள் ஒரு போதும் பறிக்கப்படாது என்று நேற்று முன் தினம் சுங்கைப்பட்டாணி சுங்ஙை லாலாங்கில் உள்ள ஹொக் டெய்க் சூ மண்டபத்தில் கெடா மாநில அளவிலான தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்ட ஆட்சிக் குழு உறுப்பினரான வோங் சியா ஜென் இவ்விளக்கத்தை தந்துள்ளார்.

இத்​​தீபாவளி பொது உபசரிப்பில் கலந்து கொண்ட மக்களுக்கு அதிஷ்ட குலுக்கல் ​மூலம் பரிசுகள் வழங்கப்பட்டன. பாரம்பரிய உணவு வகைகளும் பரிமாறப்பட்டன.

இந்நிகழ்வில் கெடா மாநில அரசு மேம்பாட்டு பிரிவின் துணைச் செயலாளர் டத்தோ ஃபௌசி முஸ்தஃபா , மந்திரி பெசாரின் இந்தியர்களின் சிறப்பு அதிகாரி குமரேசன் மற்றும் கெடா மாநில தேசிய கூட்டணி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Related News