கோலாலம்பூர், டிசம்பர்.31-
வரும் 2026-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி தைப்பூசத் திருநாளும், கூட்டரசு பிரதேச நாள் விடுமுறையும் ஒரே ஞாயிற்றுக்கிழமையில் வருவதால், ஊழியர்களுக்கு அடுத்தடுத்து கூடுதல் விடுமுறை நாட்களை உறுதி செய்து மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கூட்டரசு பிரதேச நாள் விடுமுறை கட்டாய விடுமுறை என்பதால், ஞாயிற்றுக்கிழமையை ஓய்வு நாளாகக் கொண்ட நிறுவனங்கள் திங்கட்கிழமையை மாற்று விடுமுறையாக வழங்க வேண்டும் என்றும், தைப்பூசத்தை விடுமுறையாகக் கருதும் நிறுவனங்கள் செவ்வாய்க்கிழமையையும் விடுமுறையாக வழங்க வேண்டும் என்று தீபகற்ப மலேசிய ஆள்பலத் துறை உத்தரவிடப்பட்டுள்ளது.
தொழிலாளர் சட்டத்தின் கீழ் இந்த விடுமுறைகளை மாற்று ஈடு செய்ய முடியாது என்பதால், தொடர்ச்சியாக நான்கு நாட்கள் வரை விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் இப்போதே உற்சாகமடைந்துள்ளனர். ஒருவேளை இந்த விடுமுறை நாட்களில் ஊழியர்கள் வேலைக்கு அழைக்கப்பட்டால், அவர்களுக்குச் சட்டப்படி கூடுதல் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என மனிதவள அமைச்சு முதலாளிகளுக்குத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.








