ஜெஞ்சாரோம், டிசம்பர்.31-
கோலா லங்காட், ஜெஞ்சாரோம் அருகே நேற்று நண்பகல் நிகழ்ந்த பயங்கரச் சங்கிலித் தொடர் விபத்தில், மூன்று வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானதில் 20 வயது மதிக்கத்தக்க மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவரின் வலது கை மணிக்கட்டு துண்டானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரதான சாலையில் நேராக வந்த Proton Satria கார், குறுக்கே வந்த Yamaha LC135 மோட்டார் சைக்கிள் மீது மோதிய வேகத்தில், நிலைதடுமாறி சாலையோரத் தடுப்புகளை உடைத்துக் கொண்டு எதிரே வந்த Vellfire சொகுசு காரின் மீது மோதி நின்றது.
இந்த கோர விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளைஞர் Banting மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சைக்குப் பின் தற்போது தீவிர கண்காணிப்பில் உள்ளார். மற்ற இரு வாகன ஓட்டிகளும் காயமின்றி உயிர் தப்பியதாக Kuala Langat மாவட்டக் காவற்படைத் தலைவர் Supt Mohd Akmalrizal Radzi தெரிவித்தார். இந்த கோர விபத்து குறித்து காவற்படையினர் தீவிர விசாரணை நடத்தி வரும் வேளையில், நேரில் கண்ட சாட்சிகள் யாராவது இருந்தால் உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறு காவற்படை அவசர அழைப்பு விடுத்துள்ளது.








