Sep 26, 2026
Thisaigal NewsYouTube
2030-குள் குறைந்த பட்ச மாத ஊதியம் 3000 ரிங்கிட்டாக உயர்த்த இலக்கு - அமைச்சர் ரமணன் அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

2030-குள் குறைந்த பட்ச மாத ஊதியம் 3000 ரிங்கிட்டாக உயர்த்த இலக்கு - அமைச்சர் ரமணன் அறிவிப்பு

Share:

எதிர்வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் குறைந்தபட்ச மாத ஊதியத்தை 3,000 ரிங்கிட்டாக உயர்த்த மலேசியா இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஆர். ரமணன் தெரிவித்துள்ளார்.

நேற்று கோலாலம்பூர் புக்கிட் ஜாலிலில் நடைபெற்ற தேசிய தொழிலாளர் தின விழாவில் உரையாற்றிய ரமணன், இந்த இலக்கானது, 13-வது மலேசிய திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் விரிவான தொழிலாளர் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாகும் எனக் குறிப்பிட்டார்.

இந்த சீர்திருத்தங்களானது அதிக சுறுசுறுப்பான, போட்டித்திறன் மிக்க தொழிலாளர் படையை உருவாக்குவதோடு, அவர்களின் வருமானத்தையும் உயர்த்தும் நோக்கில் அமையும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், குறைந்த திறன் கொண்ட வேலைகளின் மீதான சார்பை குறைத்து, திறன் அடிப்படையிலான வேலைவாய்ப்பை அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் ரமணன் விவரித்துள்ளார்.

மேலும், வரும் ஜூன் மாதம் முதல், 9.6 மில்லியன் ஊழியர்களுக்கு வேலை நேரத்திற்கு வெளியே ஏற்படும் விபத்துகள் உட்பட, 24 மணி நேர பாதுகாப்பு வழங்கும் லிண்டுங் 24 ஜாம் திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் ரமணன் அறிவித்துள்ளார்.

அதேவேளையில், இல்லத்தரசிகளுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டமான SKSSR-இன் வயது வரம்பு 55 - இலிருந்து 60 ஆக உயர்த்தப்படும் என்றும், இதன் மூலம் 7.2 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பயனடைவார்கள் என்றும் ரமணன் தெரிவித்துள்ளார்.

குடும்பப் பெண்கள், தங்களது குழந்தைகள், பெற்றோர் மற்றும் நோய்வாய்ப்பட்டுள்ள குடும்ப உறுப்பினரைப் பராமரித்து நாட்டிற்கு பெரும் பங்களிப்பு ஆற்றுகிறார்கள் என்றும், அவர்களுக்கு மேம்பட்ட பாதுகாப்பு வழங்குவது காலத்தின் தேவையாகும் என்றும் ரமணன் குறிப்பிட்டுள்ளார்.

Related News