கோலாலம்பூர், பிப்ரவரி.06-
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இருநாள் மலேசியப் பயணத்தை முன்னிட்டு, பொது அமைதியைக் சீர்க் குலைக்கும் வகையில் எவ்வித பொதுக்கூட்டங்களையோ அல்லது போராட்டங்களையோ நடத்த வேண்டாம் என மலேசிய உள்துறை அமைச்சு இன்று கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாளை பிப்ரவரி 7 ஆம் தேதி சனிக்கிழமை தொடங்கும் இந்தியப் பிரதமரின் இந்த வருகையின் போது, நாட்டின் நிலைத்தன்மை மற்றும் வெளிநாட்டுத் தலைவர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்ய மலேசிய போலீஸ் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கும்.
பாதுகாப்பு கருதி, இந்தப் பயணக் காலத்தின் போது பொதுமக்கள் பொது இடங்களில் எவ்விதக் கூட்டங்களையோ அல்லது போராட்டங்களையோ நடத்த வேண்டாம் என்று உள்துறை அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.
ஏற்கனவே திட்டமிடப்பட்ட கூட்டங்களை ரத்து செய்யுமாறு அதன் ஏற்பாட்டாளர்களைச் சந்தித்துப் பேசவும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நாட்டின் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையைப் பாதுகாப்பது தங்களின் கடமை எனத் தெரிவித்துள்ள உள்துறை அமைச்சு , எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி இந்த வருகை அமைவதை உறுதி செய்யப் பாதுகாப்புப் படையினர் தொழில்முறை மற்றும் கண்டிப்புடன் செயல்படுவார்கள் என்று இன்று மாலையில் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.








