கோலாலம்பூர், பிப்ரவரி.06-
சட்டவிரோத வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக நாளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அறியப்படும் பேரணியில் இனம், மதம் மற்றும் அரச பரிபாலனம் ஆகிய 3R விவகாரங்களைத் தொடும் வகையில் பேசவோ அல்லது செயல்படவோ கூடாது என போலீஸ் துறை இன்று கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது எவ்வித தயவுதாட்சனையின்றி கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சஸாலி அடாம் நினைவுறுத்தியுள்ளார்.
இந்தப் பேரணியை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ள தரப்பினர் சார்பில் அறுவர் நேற்று வியாழக்கிழமை போலீஸ் துறையை சந்தித்ததாகவும், அந்தச் சந்திப்பின் போது, இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் ஏசிபி சஸாலி கூறினார்.
பொது அமைதிக்குக் குந்தகத்தை ஏற்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையும் கட்டுப்படுத்துவதற்கு போதுமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தப் பேரணி நாளை சனிக்கிழமை இரவு 8.00 மணியளவில் கோலாலம்பூர், SOGO வணிக வளாகத்தின் முன்புறம் நடத்தப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய சமயம் போதகர் ஜம்ரி வினோத் தலைமையில் சுமார் 141 அரசு சாரா அமைப்புகள் இதில் பங்கேற்கவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத நில ஆக்கிரமிப்பு மற்றும் அனுமதியின்றி கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி இந்தப் பேரணி நடத்தப்படுவதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பல்லின மக்கள் வாழும் மலேசியாவில், இது போன்ற பேரணிகள் இனங்களுக்கு இடையே தேவையற்ற பதற்றத்தையும், ஒருவருக்கொருவர் சந்தேகப்படும் சூழலையும் உருவாக்கும் என்று அஞ்சப்படுகிறது.
சமூக அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தில் பல தரப்பினர் இந்தப் பேரணிக்குத் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.
வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான விவகாரம் மிகவும் உணர்வுப்பூர்வமானது என்பதால், பொதுவெளியில் போராட்டங்களை நடத்துவது மத மோதல்களுக்கு வழிவகுக்கலாம் என சமூகத் தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.








